சிதம்பரம் தோன்றக் காரணமான இரு முனிவர்கள்


நிலவுலகில் தவம்  செய்வதற்கு  ஏற்ற இடங்கள் எத்தனையோ இருப்பினும், மிகச் சிறந்த தலம் இதுவே என்று தனது தந்தையாரால் சுட்டிக்காட்டப்பட்ட இத்தலத்திற்கு வந்த புலிக்கால் முனிவர் தில்லை வனத்தினிடையே ஓர் அழகிய தடாகத்தையும் அதன் தென் பகுதியில் ஓர் ஆழமர நிழலில் சிவலிங்கத் திருவுருவத்தையும் கண்டு அங்கேயே ஒரு தவச்சாலை அமைத்து பூசித்து வந்தார். நமக்கு கிடைத்த புராண வரலாற்றின் படி இவரே இத்தலத்தை முதன் முதலில் கண்டு தரிசித்தவர். அதற்குப்பின் இறைவன் ஆணைப்படி ஆதிசேடனே பதஞ்சலி உருவத்தில் இங்கு வந்து புலிக்கால் முனிவருடன் சேர்ந்து கொண்டு இத்தலத்தில் தவம் செய்தார். இவர்கள் தொழுது வந்த லிங்கமே திருமூலட்டானேஸ்வரர் ஆகும். இவருடைய கோவில் நடராஜர் சந்நிதிக்கு வடபால் அமைந்துள்ளது. அம்பாள் பெயர் உமைய பார்வதி ஆகும்.

                              ஒரு காலத்தில் தேவதாரு வனத்தில் வாழ்ந்த நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்களின் தவ செருக்கினை அளிக்கவும், அம்முனிவர்களின் மனைவியரின் கற்பின் செருக்கினை அளிக்கவும்சிவபெருமான் திருமாலுடன் அங்கு சென்று முதலில் கடுங் கூத்தினை ஆடினார்.  இக்கூத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ளவியலாத முனிவர்களின் துயரங்களை போக்கி அவர்களுக்கு அருள் செய்ய திருவுளங்கொண்டு பின்னர் ஆனந்தத் திருக்கூத்தினை ஆடி அருளினார். இந்த ஆனந்த திருக்கூத்தினை தாமும் காண பல ஆண்டுகள் தவம் செய்த புலிக்கால் முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களுக்காக தை பூசம் குருவாரத்தோடு கூடிய சித்த யோக நன்னாள் ஒன்றில் உச்சி காலத்தில் இத் திருக்கூத்தினை ஆடியருளினார். அவரே பொன்னம்பலத்தில் ஆடி அருளும் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆவார். சிவகாமி அம்மையார் காண ஸ்ரீ நடராஜர் ஆடி அருளிய ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை இந்த முனிவர்கள் இருவரும் மற்றும்  திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்கள்மூவாயிரம் முனிவர் பெருமக்களும் கண்டு மகிழ்ந்தனர். அப்பொழுது இந்த இரு பெரும் முனிவர்களும் இந்தத் திருக்கூத்தினை எல்லா மக்களும் எக்காலமும் காண ஆடி அருள வேண்டும்  என்று பிரார்த்திக்க  இது அன்று முதல் இன்று வரை எவ்வித இடையீடின்றி அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்